வெள்ளி, 19 ஜூலை, 2013

சூ……………!





கவிதையில் அமர்ந்திருந்த
அனைத்துப் பறவைகளையும்
விரட்டிவிடத் தோன்றியது.
எனக்கே புளிப்பதாகியிருக்கிறது
என் நிலத்தின் தானியங்கள்.
ஒரு பறவையை
பறவையென்பதையே மறந்துபோகும்படி
என்னால் செய்ய முடிந்திருக்கிறது.
சுவற்றிலும் தரையிலும் மோதிக் கத்துகிறது
மெல்லியதாய் ஒரு கணத்தில்.
எழுதுகோலை முறித்து காற்றில் கீறுகிறேன்
பறந்து… பறந்து… பறந்து ….செல்ல.
அந்தரத்தில் மிதக்கும் நான்
கீழே எட்டிப்பார்க்க நேர்ந்ததில்
என் தோலில் சொருகும்படி
கூண்டுக் கம்பியை ஓங்கிக்கொத்தியது பறவை.


திங்கள், 1 ஜூலை, 2013


வீடு திரும்பாதவன்

















சொற்களில் மிதக்கவிட்ட நட்சத்திரங்களுக்கடியில்
வீட்டின்
காய்ந்த சிறு செடி படுத்திருக்கிறது.
ஓயாமல் வண்ணங்கள் அடித்துக்கொண்டிருக்கிறேன்
மேற்கூரையில் ஒட்டடைக்கும் மேலே
பலதிசையில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளுக்கு.
என் இருண்ட பிரதேசத்தில்
அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டே கிடக்கிற
அவளின்
அவனின்
அவர்களின்
அநாதைப் பிரியங்கள்
விழியசையாமல் எதையோ நோக்கியிருக்கிறது.
அவன், அவள், அவர்கள், அது, இது, எதுவும்
என் சொற்களைத் திறந்து பார்ப்பதில்லை,
என் காது கேட்காத சொற்களைத்
திறந்து பார்ப்பதில்லை.