செவ்வாய், 19 நவம்பர், 2013

பேசாத சொல்


விடிய விடிய
சொற்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பூஜ்யத்தை மீறாத மனக்கணக்கு.
காதருகில் ஒரு சொல்
தீராத அலையடிக்கிறதா?
மற்றொரு சொல்லுக்குப்பின்
ஏறி இறங்கினேன்.
அடர் கானகத்தில்
ஒற்றையடிப் பாதைகள்
வளைந்து நீண்டு கிளைபிரிகிறதா?
மேகத்தைப்போல மிதந்துவரும்
சில சொற்கள்
உடைந்து ஈரமாக்க வேண்டுமே.
என் பெயரில் ஒரு சொல்?
சந்தடிச் சாலையோரம்
கேட்பாரற்று நின்றாலும்
என் மண்ணைத் திண்றுகொண்டே
காற்றோடும் காலத்தோடும்
லயித்தசையும் விருட்சமாக.
அவலச் சுவை தனிமையானது,
அதன் சொற்களும் தனித்தனியானது.
விடிய விடிய
காலத்தை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.