சனி, 13 டிசம்பர், 2014

மலைகளுக்கிடையே நொண்டும் கால்கள்










குரல்கள் மொய்க்கும்
என் வீட்டுக் குழந்தைக்கும்
ஒரு குரலும் அண்டாது
சதா சாலையில் திரிந்துகொண்டிருப்பவளுக்கும் இடையில் …
என் உள் வீட்டின் உள் அறைகளில்
தோழனொருவன்       
திடீரென விளக்கை எரியவிடுவதற்கும்
சொல்லாமல் அணைத்துவிடுவதற்கும் இடையில் …
இருகைகள் பற்றி இழுக்கும் சிறுமிகளும்
கண்கள் பற்றிப்பற்றி இழுக்கும் சிறுபெண்களும்
தீட்டும் இருவேறு நிறங்களுக்கு இடையில்  …
ஈர விரல்களோடு
பின்னிருந்து கண்பொத்தும் ஒரு கவிதைக்கும்
கண்களை கட்டிக்கொண்டு
காற்றில் வலை எறிந்தபடி இருக்கும்
இந்தக் கவிதைக்கும் இடையில் …
நான் உறைந்திருக்கும் கவிதைகள்
மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட
மெல்லிய கம்பியின்மேல் கிடக்கிறது
ஒற்றைக்காலில் நொண்டியபடி.




புதன், 12 நவம்பர், 2014



பெருமரமொன்று
பலநுறு கிளைகளோடு
பலப்பல பறவைகளோடு
மண்ணடி ஈரத்தையும்
வெட்டவெளி காற்றையும்
ஸ்பரிசித்தபடி அசைந்துகொண்டிருக்கிறது.
இந்தக் காட்சியில்
குழந்தையொன்று
நினைவுக்கு வந்துபோகிறது.



ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குட்டிநாயின் முயல்











அவளின் டாட்டாவில் அமர்ந்திருந்த
முயலொன்று
கூடவே வருகிறது.
பெரிய உருவத்தில்
தடுமாறித்துள்ளும் நாய்க்குட்டியை
நொடியில் மோப்பம்பிடித்தவள்,
காலத்தை புல்தரையாக்கி
என் நிலமெங்கும் செடி நட்டாள்
ஒட்டிக்கொண்டும் முத்தம்கொண்டும்.
அவ்வளவு சிறிய முத்தத்தை
வேரும் கனியும் காணாத முத்தத்தை
எந்த முத்தத்தையும் போலில்லாத முத்தத்தை
காலத்திற்கும் ஈரம் காயாத முத்தத்தை
எங்கிருந்து கொண்டு வந்தாள்…..
டாட்டாவிலிருந்து துள்ளிய அந்த முயல்
துவண்ட குட்டிநாயின் மடியில் கிடக்கிறது
அவளின் பாவனைகளோடு.

(ஷிஃபா (எ) அணில்குட்டிக்கு)


வெள்ளி, 7 மார்ச், 2014

துயிலெழும் ஆன்மா 



இந்தப் பொழுதை
இரண்டு கைகளாலும்
யாரோ வாசிக்கிறார்கள்.

தகிக்கும் இத்தார்ச்சாலையில்
துயிலும் என் ஆன்மாவின் செவியருகே
குரலொன்று வளைந்துநெழிகிறது.

சப்த நெரிசலுக்கிடையில்
கொத்துச் சிறகாய் மேலெழுந்து
ஆவி அலைகிறது ;
கூடவே
மேகத்தைப்போல்
மெதுமெதுவாய்க் கலைகிறது காலம்.
அல்லது
இந்த கானத்திற்கு
நகரமே நடனமாய் அசைந்துகொடுக்கிறது.

வாகனத்தை நிறுத்திவிட்டுச்சென்று
யாரிடமோ பேசுகிறேன்
இவனென்னவோ
ஒரு பாடலுக்கு அசைப்பதைப்போல்
தலையைத்தலையை ஆட்டுகிறான்.

நன்றி : padhaakai.com


வியாழன், 6 மார்ச், 2014

பாடல் கேட்கும் நட்சத்திரம்


இந்த முன்னிரவில்
எனது அறையிலிருந்து
வானத்திற்குப் பாய்கிறதொரு நதி.
நீரில் ஒரு பாறை விழுந்து
உடைந்து
மீனாகி
நீந்திக் கரைந்து
நட்சத்திரமாகி தரையில் விழுகிறது.
நதியும் நட்சத்திரமும்
பாடல் வரியில் அல்ல வரிக்குள்
நீண்டும் நெளிந்தும் ஒளிர்ந்தும்
பூட்டிக்கொண்டு சிரிக்கின்றது.
இசையுள்ளே காற்றாம்
அறையுள்ளே வானமாம்
இரவில் நான் மின்னுகிறேனாம்
கண்களை சாத்திக்கொண்டு.

நன்றி : padhaakai.com


ஞாயிறு, 12 ஜனவரி, 2014

விடிவது



எந்த அறிகுறியுமற்று
ஏதோவொன்றாக விடிந்துவிடுகிறது
சில பொழுது.
இசையாக
காற்றில் மிதந்து செல்கிறது உடல்
இலேசாகவும் கனமாகவும் இல்லாது.
ஒரு சிக்னல் தேவைப்படுகிறது,
அந்த நிறுத்தத்தில்
அருகிலொரு வாகனம் தேவைப்படுகிறது,
அதில் ஒரு சின்னஞ்சிறு சிறுமியின்
ஏதாவது இரண்டு சொல் தேவைப்படுகிறது
இந்த நாளை அநாதையாக்காமல்
தொட்டுத்தூக்க.


சாயம்போன ஒளியில் அணில்


பதட்டத்திலும் குழப்பத்திலும்
ஒடிந்த கிளையின் நுனிக்கு
ஓடிஓடித் திடுக்கிடுகிறது அணில்.
இந்தக் கிளைகளெல்லாம்
அரவமற்றும் குறிப்பற்றும்
காற்றுக்குள் முறியும் இயல்பானவை.
அந்தரத்தில்
அந்தக் கிளை பயணித்த
தடத்தில் தெரியும்
சாயம்போன ஒளியைப் பார்க்கிறது.
பார்த்துவிட்டுப்
பார்த்துவிட்டு
ஓடுகிறது.

புதன், 8 ஜனவரி, 2014




மேசைமேல் நின்று
படபடக்கும் புத்தகத்தை
இந்தப்பக்கமிருந்தும் அந்தப்பக்கமிருந்துமாக
இருவர் வாசிக்கிறார்கள்.
ஒரே கணத்தில் ஒரே சொல்லை
இருவரும் சொல்லும் பொழுது
கவிதை மறைந்து
புத்தகம் தொலைந்து
கண்ணாடியாகிறார்கள்
இவனுக்கு அவனும்
அவனுக்கு இவனும்.