புதன், 30 டிசம்பர், 2015



ஞாபகச்சிற்பம்




காலித் தண்டவாளமாகக் கிடக்கும்
மனதின்மேல்
பாரமான புகைவண்டியாக
கடந்து செல்ல ஒருத்தி இருக்கிறாள்.
நினைவின் நீள் வனத்தினுள்
உள் ஒடுங்கி வீசும் அவளது பறவைக் குரல்
அசைந்து செல்லும் என் காட்சிகளில்
நிரம்புகிறது
சாம்பல் வண்ண இசையோடு.



திங்கள், 30 நவம்பர், 2015



பலவீனமான இதயம்
















இந்த நிம்மதியற்ற கண்ணீர்
உன் முகத்தின் சாயலிலிருக்கிறது.
தஸ்தயேவ்ஸ்கியின்பலவீனமான இதயம்
கதைக்குள் நீ இருப்பாயா நண்பா?
பிரியம் நிரம்பிய மழைக்காலத்தில்தான்
நீ வீதியில் வந்து படுத்திருக்கிறாய்.
கவலையின்றி உறங்குபவனைச்
சுற்றுகின்றன நுறு விழிகள்.
உங்களுக்கு வேறு வேலையில்லையா?
விழிகளுக்கிடையில் தென்படும்
உன் சின்னஞ்சிறு மகளின் ஜீவனற்ற விழிகள்.
ஒருவர்கூட உனக்கு நினைவுபடுத்தவில்லையா?
கடந்த காலத்தின் சொற்கள்
மழையோடு சேர்ந்து விடாது கொட்டிக்கொண்டிருக்கிறது.
நம் நண்பனோடு
சாலையோரத்தில் நின்றுகொண்டே இருக்கிறேன்.
நீ இல்லை என்பதை எங்களுக்கு எப்படி புரியவைப்பாய்?
துயர இசையும் உன் ஞாபகமும் கலந்தபடி
மனது கொடுக்கும் மங்கிய வெளிச்சத்தில்
இரவுச் சாலையில்
ஒளியற்ற குற்றவுணர்வுக்குள்
கடந்துகொண்டேயிருக்கிறது என் வாகனம்.
ஒரு முழுநாள் எப்பொழுதும்
நான் கனவு கண்டதில்லை.
விரைவாக உறங்கி எழுந்து
நீ இருக்கிறாய் என்பதை
உனக்கு தொலைபேசியில் சொல்லட்டுமா நண்பா…? 









வியாழன், 13 ஆகஸ்ட், 2015



தாளாத குளம் 



குளத்து நீருக்குள்
சிறகசைத்துக் கொண்டிருக்கிறது காக்கை.
தனதான போக்கில் நீந்தியபடி
முகில் கூட்டம்.
வெயிலாய் உருகிச்சிந்திய சூரியன்
நித்திரைக்கு முன்னான பொழுதுகளை
குளித்துக் களிக்க
செடியொன்று விருட்சமானது முதல்
தண்ணீரில் உறக்கம்.
மிதக்கும் பெருவாழ்வை கோர்த்தபடி அள்ள
பரிசல்காரன் அகண்ட வலை வீசிய கணம்
கையிலிருந்த சிறு பாறையை எறிந்தேன்.
காக்கை அந்தரத்திலும்
முகில்கூட்டம்  ஆகாயத்திலும்
சூரியன் மலைச்சரிவிலும்
விருட்சம் கரையிலும்
சிதறித் தெரித்தது.
கறுத்த சாமத்திற்குள்
தன் ஒற்றை விழியையும்
தாளாது சாத்திக்கொண்டது குளம்.



நன்றி - படிகம் (நவீன கவிதைக்கான இதழ் - ஆகஸ்ட் 2015)





சனி, 1 ஆகஸ்ட், 2015

நிலவின் புழுதியால் செய்தது






இந்த பூமியில்
நிலவும் ஒரு ரயில் வண்டியும் நானும்
தனியாக விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
நீளும் ஊர்தலில்
இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக
உருண்டுகொண்டிருக்கிறது நிலா.
வீசியடிக்கும் காற்றில்
நிலவில் பறக்கும் புழுதிதான்
சொற்களாக இங்கு படிகிறது.
இந்த தட..தட… தடக்…தடக்… ஒலி
நிலவில் வளர்ந்துவரும்
ஒரு செடிக்கான பாடலாக இருக்கலாம்.
நான் என் இரவின் கனவை
இப்போதே செய்கிறேன்.
நிலவைக் கண்டபடி
நிலவொளியைப் போர்த்தியபடி
நிலவின்மேல் உறங்கிப்போனதை அறியாமல்
தனியாக உருண்டுகொண்டிருக்கிறது என் ரயில்.




சனி, 20 ஜூன், 2015



இன்றின் சித்திரம் என்கிற அன்றைய பாடல்



பட்சிகளுக்கு மேலாக
பறந்துகொண்டிருக்கிறது ஆகாயம்
ஞாபகம் என்ற ஒற்றைச்சொல்மேலே
நானும் இச்சிறுமியும்.
தொலைதூரப் பாதையில் தன்னந்தனியாய்
கூடடையும் பறவை
கடந்த காலத்தின் நாளொன்று
வெட்டவெளியில் மிதக்கிறது இன்றைக்கு.
மரக்காற்று கூடோடு சேர்ந்தசைக்கும் ராகத்தில்
புலப்படாமல் உதிர்கிறது நிகழ்காலம்.
மரத்தடியில் தோள்களொட்டிய பழஞ்சித்திரத்தை
எதிர் இருக்கும் கித்தானில் தீட்டுகிறது
கடந்த காலத்தின் ஈரம்காயாத விரல்கள்.




திங்கள், 27 ஏப்ரல், 2015



அகதி ரயில்



அகதி வாடை காற்றை நெரிக்க
இந்நகரம் மழையாய்ப் பெய்கிறது.
அவன் நிலத்திலிருந்து சிதைக்கப்பட்ட கால்களும்
வயலிலிருந்து பிடுங்கப்பட்ட கைகளுமாய்
தனிமையில் நைந்த சொற்களோடு
இந்நகரின் வெயிலை நனையவிடுகிறான்.
மழையின் பாடலுக்கு
காது கொடுக்கும் வாய்ப்பற்றவன்
ரயிலின் பாடலுக்கு
மூலையில் சுருண்டு
கனவின்மேல் படுத்துக்கொள்கிறான்.
அவனது சொந்த ரயில் பற்றிய
அறிவிப்புகளில்
அவனூரின் மேகம் குளிர்ந்து
கனவில் ஈர மழையாய் ஓட…..
அகதி வாடை காற்றை நெரிக்க
இந்நகரமே மழையாய்க் கொட்டி
அலுத்துக்கொண்டிருக்க
அவனது நினைவின் ஒரு சரடு பற்ற
நெருங்கிவிட்டது ரயில்.



திங்கள், 9 மார்ச், 2015

சாலையோரம் படுத்திருக்கும் கனவு 





சாலையோரம் படுத்துக்கிடப்பவனின்
தன்னந்தனிமையில்
தளிரசைக்கிறது கனவொன்று.
அவனை
எப்பொழுதும் முத்தமிடும்
சிறுமி ஒருத்தி
அதில் ஓடிக்கொண்டிருக்கிறாள்.
இருவரும் விரல் பற்றியபடி
பேசிப்பேசிக் கடந்த
பள்ளிச் சாலை வழியாக …
துள்ளித்கொண்டே அடைந்த
பூங்கா வழியாக …
அழுதுகொண்டே நடக்கும்
சலூன் கடை வழியாக …
ஒரு சாலை திருப்பத்தில்
தனிமையான விரலோடு ஓடிக்கொண்டிருப்பவளின்
சுண்டுவிரலை அவன் பற்றிக்கொள்ள
வேகமாக வீட்டை அடைந்து
போர்வைக்குள் நுழைந்து
நாளைய காலைச் சாலையில்
சிணுங்கிச்சிணுங்கி சண்டையிடப்போகும்
கனவைக் காணத்தொடங்கினார்கள்
இருவரும். 





வெள்ளி, 6 மார்ச், 2015

அவன் கால்கள் நிலத்திலில்லை




ஒரு பட்டத்தை
பார்வைக்குப் புலனாகாத நுலொன்று
எடுத்துச்செல்கிறது நிலவுக்கு.
அவனுக்கு இசை.

நுலின் தாளத்திற்கு
அசைந்துகொடுக்கும் மனதிற்கு
காற்றின் நிறத்திலொரு மேடை.

நுல் முடிந்து
அந்தரத்தில்
அநாதரவாய் விடப்பட்டவனின் கால்கள்
நிலத்தை அடையவில்லை.

இப்பொழுது
நிலவில் கைவைத்து
சாய்ந்தபடி அமர்ந்திருக்க
மனதின் குருட்டு ராகத்திற்கு
அலைந்துகொண்டிருக்கிறதந்த கால்கள்.  


புதன், 4 மார்ச், 2015

அரச இலைகள்












ஈர இரவின்
பிறையின் சன்ன ஒளியில்
அரச மரத்தின் சல்லி வேர்களை வரைந்தவன்
அதன் தண்டிற்காக
நண்பகலொன்றின் தூய வெப்பத்திற்கு
மரத்தடிக் கல்லில் அமர்ந்தான்.
மாலையைப் பாடும்
பட்சிகளின் அலகால்
கிளைகளை வளைத்து முடித்தவன்
இலைகளுக்கான பச்சைக் கணமொன்றை
காணாது நின்றான்.
வெட்டவெளி நெகிழ்ந்தசைய
ஒவ்வொரு இலையாய் வரைந்தவன்
கடைசி இலையின் ஸ்பரிசத்தால்
இளம்பச்சை நிறத்தானாகி
உதிரா ஓர் இலையானான்.




சனி, 24 ஜனவரி, 2015




இளமஞ்சள் வண்ணச் சூரியன்
ஒருநாளும் பேசாத மலைக்குப்பின்
காக்கைகள் அலறிக் கரைய
எல்லோரும் கடந்துவிட்ட இந்த மாலையிலே
கடைசியாய் பிரியும்பொழுது
மேலும் கொஞ்சம் தனிமையானேன்.



ஞாயிறு, 4 ஜனவரி, 2015




இரவு
மலை முகட்டுக் குளிர்
சொல்
தனித்தலைவுறும் சிறுவிருட்சம்
கவிதை
வேரடியில் கரைந்துருளும் ஈரவோடை
புலர்காலைக் கதிரோடு தரையிறங்கினால்
சாலையெங்கும் நதிகள்
மண்ணெல்லாம் தளிர்கள்.