புதன், 13 ஏப்ரல், 2016



இரண்டு உடல்



ஊடுருவும் மதிய வெயிலில்
பாலத்தின் மேலிருக்கையில்
புறாக்களின் இறக்கை ஒலி
கேட்டுவிடக்கூடுமெனில்
எல்லாமும் மீண்டுவிடும்.
பாலம் இறங்கித் திரும்புகையில்
பெண்ணொருத்தி கசியவிடும்
மனம் பிறழ்ந்த புன்னகையில்
மீண்டதனைத்தும் உறைந்துவிடும்.
எதிரே பிரியும் இரண்டு சாலையில்
உடல் பிளந்து சென்றுவிட
வீடு செல்லும் வழி தவறி
சாலையோரம் கிடக்கிறது
சலனமழிந்து இருண்ட நிழல்.


வியாழன், 7 ஏப்ரல், 2016



நான்கு பந்துகள் 





மதிற்சுவருக்கும் பெருமரங்களுக்கும்
பின்னிருந்து வரும்
சூரியனைப் பார்த்தபடி உருள்கிறது
மைதானத்துப் பந்து.
அணில் ஏறும் மரம் தீண்டிய
சிறுவனின் பார்வை உரசிப்போனது
மேற்கில் தொங்கும் சந்திரனில்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே
கடந்துகொண்டே இருக்கிறது நிறமழிந்த பந்து.
கம்பத்தை நெருங்கியபடி
படபடக்கும் கால்களுக்கிடையே
இளஞ்சிவப்பு நிறமாகி
மைதானத்தின் மத்தியில் நிலவுக்கு அடியில்
உயர்ந்து பறக்கையில்
வெள்ளை நிறமுமாகி
அதிகாலைப் பட்சிகளின் இறகுகளை
மைதான வெளியெங்கும் சிந்துகிறது பந்து.
நெகிழ்ந்து அசையும் இறகுகளின் லயத்திற்கு
மைதானமே ஆடிக்கொண்டிருக்க
அரூபப் பந்தொன்று தனியாக உருள்கிறது.



செவ்வாய், 5 ஏப்ரல், 2016



செல்ல நதி 



அம்மாவின் குரலொரு ஆறு இல்லையா பிள்ளையே…
நீ படுத்தபடி கை கால் அடிக்கையில்
நதி சிதறுகிறது.
நானுன்னிடம் நீந்துகிறேன் பார்க்கிறாயா….
அம்மாவின் கழுத்தை தொட்டுப்பார்த்துவா,
போகலாம்
உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான்…
தெரியுமா…..

Painting : J. Krik Richards



துள்ளும் வால்தான் இது  

சிதைந்த தேகத்தோடு
சரியச்சரிய நொண்டிச் செல்லும் யாசகனின்
கால்களில் குலையும்
நாயொன்றின் துள்ளும் வால்தான்
இக்கவிதை.
என் கண்ணுக்குள் ஆடி
உங்கள் விரல்களின் இரத்த ஒட்டத்தில் உரசுகிறது.
அவனுக்கென யாருமற்ற பாதையில்
நாயது ஆகாயம் விரித்தது.
இங்கிருக்கும் வார்த்தைகள்
நட்சத்திரங்களாய் உற்றுக்காண்கிறது.
யாசகனின் கைக்கோல் அசைவு
மானின் இதமான பாய்ச்சலாய்
இப்போது புல்நிலம் மேவுகிறது.