திங்கள், 17 அக்டோபர், 2016

அந்த மழை வந்திருக்கிறது















மண் சிறு குழந்தையாகிவிட்டது
நகரம் விநோதமான ஒரு பொம்மை
உடல் உழவனின் நிறத்தை அப்பிக்கொண்டது
உதிர்ந்துகொண்டிருக்கிறது கிளிகளின் தானியம்
வேறொன்றுமில்லை
தொல்பாடல் என்ற மழை
நம் காலத்தை உடைத்துக்கொண்டு விழுகிறது
கேட்கிறதா ...
மூதாதையின் செவிமடலை எடுத்து வையுங்கள்.


செவ்வாய், 4 அக்டோபர், 2016


கடவுளின் ஐஸ் வண்டி  
















மழை நனைத்துச்சென்ற காலையிலும்
நண்பகல் பிசுபிசுப்பைக் கொட்டியபடி
பதறித் தெரிக்கின்றன வாகனங்கள்.
தூக்கக்கலக்கச் சாலைகளை
திகைக்கச் செய்யவென
அதிஅவசரமாக சிலர் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த சில நிமிடங்களில்
கசடேறிக் கிழிந்த மனிதர்கள்
காலை வயிறுக்கு வானம் பார்ப்பவர்கள்
சாலையெங்கும் சொற்களை எறிபவர்கள்.
அந்தத் திருப்பத்தில்
இந்தக் காலையைக் குணப்படுத்த வக்கற்று
சுவரில் சாய்ந்து தலையைச் சொரிகிறார் கடவுள்.
பெரும்பாலையாய்
விரவிக்கொண்டிருக்கும் என் நகரின்
ஒவ்வொரு தெருவிலிருந்தும்
அந்தக் கடவுளை ஆசீர்வதித்துத்
தேற்றக் கிளம்புகின்றன
பள்ளிக்கூட ஆட்டோக்கள்
சாலையெங்கும் ஐஸ் கட்டிகளை இரைத்தபடி


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
Painting - Ekaterina


திங்கள், 3 அக்டோபர், 2016


அகாலத்தில் தொலைந்த கவிதை 

 
















ஒரு சொல்லும் கிடைக்காத கவிதையொன்று
தெருத்தெருவாக அலைகிறது.
இளவேனிற் மரங்களின் கிளைகளையும்
வறண்ட நதியை இழுத்துச்செல்லும் பருவங்களையும்
மலைகளுக்கிடையே தனித்துப்பாடும் தேன்சிட்டையும்
விட்டு விட்டு
எங்கோ பார்த்தபடி அலைகிறது.
நிர்கதியாய் திரியும் அதன்
தோள்பட்டையை அண்டியபடி நடந்து செல்கிறேன்
சொல் ஒன்றுக்கு திராணியற்று.
ஒரு வித்தின் கனத்திற்கு நிகரான
சொல்லுக்குத் திரிந்த அக்கவிதை
பனி கொட்டி கருகிய மரமாய்
இறுகித் தொலைந்தது அகாலத்தில்.


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
ஓவியம் - Sam Sidders