திங்கள், 17 அக்டோபர், 2016
செவ்வாய், 4 அக்டோபர், 2016
கடவுளின் ஐஸ் வண்டி
மழை நனைத்துச்சென்ற
காலையிலும்
நண்பகல் பிசுபிசுப்பைக்
கொட்டியபடி
பதறித் தெரிக்கின்றன
வாகனங்கள்.
தூக்கக்கலக்கச்
சாலைகளை
திகைக்கச் செய்யவென
அதிஅவசரமாக சிலர்
கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த சில நிமிடங்களில்
கசடேறிக் கிழிந்த
மனிதர்கள்
காலை வயிறுக்கு
வானம் பார்ப்பவர்கள்
சாலையெங்கும் சொற்களை
எறிபவர்கள்.
அந்தத் திருப்பத்தில்
இந்தக் காலையைக்
குணப்படுத்த வக்கற்று
சுவரில் சாய்ந்து
தலையைச் சொரிகிறார் கடவுள்.
பெரும்பாலையாய்
விரவிக்கொண்டிருக்கும்
என் நகரின்
ஒவ்வொரு தெருவிலிருந்தும்
அந்தக் கடவுளை
ஆசீர்வதித்துத்
தேற்றக் கிளம்புகின்றன
பள்ளிக்கூட ஆட்டோக்கள்
சாலையெங்கும் ஐஸ்
கட்டிகளை இரைத்தபடி
•
நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
Painting - Ekaterina
திங்கள், 3 அக்டோபர், 2016
அகாலத்தில் தொலைந்த கவிதை
ஒரு சொல்லும் கிடைக்காத கவிதையொன்று
தெருத்தெருவாக
அலைகிறது.
இளவேனிற் மரங்களின்
கிளைகளையும்
வறண்ட நதியை இழுத்துச்செல்லும்
பருவங்களையும்
மலைகளுக்கிடையே
தனித்துப்பாடும் தேன்சிட்டையும்
விட்டு விட்டு
எங்கோ பார்த்தபடி
அலைகிறது.
நிர்கதியாய் திரியும்
அதன்
தோள்பட்டையை அண்டியபடி
நடந்து செல்கிறேன்
சொல் ஒன்றுக்கு
திராணியற்று.
ஒரு வித்தின் கனத்திற்கு
நிகரான
சொல்லுக்குத் திரிந்த
அக்கவிதை
பனி கொட்டி கருகிய
மரமாய்
இறுகித் தொலைந்தது
அகாலத்தில்.
•
நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
ஓவியம் - Sam Sidders
வியாழன், 29 செப்டம்பர், 2016
அந்த அலைகள் தாத்தாவுடையது
முதன்முதலில் எனக்காக
அலைகளைக் கூட்டி வந்தார் தாத்தா.
கடலுக்குள் நுழையவிடாமல் எட்டி
நின்று
என் அலைகளை அசைக்கச் சொன்னார்.
சின்ன வயதில்
அந்தப் பேருந்து விரைந்து செல்கையில்
எதிரே கடல் வந்து நின்றதை
இப்பொழுது என்னவென்று சொல்ல.
என் தாத்தாவின் ஒரு புகைப்படமும்
என்னிடம் இல்லை.
பதிலாக
கடல் நடுவே ஒரு படகு மிதக்கிறது,
தொலைவில் ஒரு முதிர்ந்த அலை
ஆகாயம் செல்கிறது.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கடல்
பார்க்கிறேன்.
மாறாமல் முதல் அலையில்
எப்பொழுதும் தாத்தா வருகிறார்.
•
நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
வெள்ளி, 9 செப்டம்பர், 2016
போதவில்லை
போதவில்லை
ரயிலுக்கு நுறு குழந்தைகள் ஏறிக்கொள்கிறார்கள்
நுறு பொம்மைகளோடு
அவர்களின் தோழர்களும் பின்தொடர்கிறார்கள்.
போதவில்லையென்று
ஆளுக்கொரு திசையிலிருந்து
இளம்பெண்களும் பூரி வடை விற்பவர்களும்.
நான்கு துப்புறவுப் பெண்கள்
அங்கும் இங்கும் திரிகிறார்கள்
யாருடைய இதயத்திற்கோ போதவில்லை.
அடங்காத கனிந்த மனம்
ஒவ்வொரு பெட்டியாக
ஒவ்வொருவரின் காலுக்கடியிலும்
முடமான ஒருவனை தள்ளிக்கொண்டிருக்கிறது.
போதவில்லை
போதவில்லை என்று
வேற்று நிலத்து யாசகனை
முதிர்ந்த தனிமையால் யாரோ செதுக்குகிறார்கள்.
ஒரு என்ஜின்
இவ்வளவு பெட்டிகளையும்
இழுத்துக்கொண்டோடுவதைப் பற்றி
முன்பு நினைத்துப் பார்த்ததில்லை.
•
புதன், 10 ஆகஸ்ட், 2016
வெயிலைக் கடக்கும் உடல்
வெயில் கொட்டும்
நகரச் சாலையின்
நடை பாதையோரத்தில்
பெருகி ஓடும் உடல்களை
ஞாபகங்களின் குளிர்மையோடு
கடக்கையில்
எதிர்ப்படுகிறது
தரையில் கிடத்தப்பட்டிருக்கும்
முடமான உடல்.
இரண்டு கண்கள்
இரண்டு கண்களையும்
ஒரு உடல் பிரிதோர்
உடலையும்
ஒரு காட்சி வேறொரு
காட்சியையும்
ஒருசில ஞாபகங்கள்
வேறுசில ஞாபகங்களையும்
சிரத்தையின்றிக்
கடக்கின்றன.
துளி ஞாபகங்களும்
மிஞ்சாது உலர்ந்தபடி
இந்த வெயிலைக்
கடக்கின்றன.
•
புதன், 6 ஜூலை, 2016
வாழ்வின் மீதொரு முத்தம்
ரயிலோட்டி
தானொரு வகை பறவையென்று
ஊருக்குள் சொல்லித்திரிகிறான்.
கூ.. .. என்ற ஒலி
அவன் குரல்வளைக்குள் இறங்க
காற்றுவெறி அவன்
அந்தர வீடு.
பனங்காட்டிற்குள்
வைகறை கலக்கத்தில்
தன் உடலை அழைத்துச்செல்லும்
மாய நிகழ்வுகளில்
காலம் தள்ளுபவன்
சிறுகூடும் வேயத்தெரியாதவனென
ஊர்சுற்றி மிதக்கும்
சப்தங்களை
சாமத்தில் முளைத்த
ஒற்றை வெள்ளியோடு
சிரித்துக் கடக்கிறான்.
காலின்றி ரயிலில்
ஊறும் ஜீவன் பற்றிய
குற்றவுணர்வுப்
பாடலையும்
குழந்தைகள் ஏறாத
இரவு காலங்களின்
ஆலாபனையையும்
புலர்காலைப் பட்சியின்
முதல் ராகத்தையும்
அவன் ஓர சேரப்
பாடிச் செல்கிறான்.
ரயில் முழுக்க
சொற்களை வைத்துக்கொண்டு
அவன் பாடும் பாடல்கள்
இலை பழுத்து விழுவதைப்போல்
முத்தமாக விழுகிறது
அவன் வசிக்கும்
உடலுக்குள்.
•
திங்கள், 16 மே, 2016
புதன், 13 ஏப்ரல், 2016
இரண்டு உடல்
ஊடுருவும் மதிய
வெயிலில்
பாலத்தின் மேலிருக்கையில்
புறாக்களின் இறக்கை
ஒலி
கேட்டுவிடக்கூடுமெனில்
எல்லாமும் மீண்டுவிடும்.
பாலம் இறங்கித்
திரும்புகையில்
பெண்ணொருத்தி கசியவிடும்
மனம் பிறழ்ந்த
புன்னகையில்
மீண்டதனைத்தும்
உறைந்துவிடும்.
எதிரே பிரியும்
இரண்டு சாலையில்
உடல் பிளந்து சென்றுவிட
வீடு செல்லும்
வழி தவறி
சாலையோரம் கிடக்கிறது
சலனமழிந்து இருண்ட
நிழல்.
•
வியாழன், 7 ஏப்ரல், 2016
நான்கு பந்துகள்
மதிற்சுவருக்கும்
பெருமரங்களுக்கும்
பின்னிருந்து வரும்
சூரியனைப் பார்த்தபடி
உருள்கிறது
மைதானத்துப் பந்து.
அணில் ஏறும் மரம்
தீண்டிய
சிறுவனின் பார்வை
உரசிப்போனது
மேற்கில் தொங்கும்
சந்திரனில்.
சூரியனுக்கும்
சந்திரனுக்கும் இடையே
கடந்துகொண்டே இருக்கிறது
நிறமழிந்த பந்து.
கம்பத்தை நெருங்கியபடி
படபடக்கும் கால்களுக்கிடையே
இளஞ்சிவப்பு நிறமாகி
மைதானத்தின் மத்தியில்
நிலவுக்கு அடியில்
உயர்ந்து பறக்கையில்
வெள்ளை நிறமுமாகி
அதிகாலைப் பட்சிகளின்
இறகுகளை
மைதான வெளியெங்கும்
சிந்துகிறது பந்து.
நெகிழ்ந்து அசையும்
இறகுகளின் லயத்திற்கு
மைதானமே ஆடிக்கொண்டிருக்க
அரூபப் பந்தொன்று
தனியாக உருள்கிறது.
•
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
துள்ளும் வால்தான் இது
சிதைந்த தேகத்தோடு
சரியச்சரிய நொண்டிச்
செல்லும் யாசகனின்
கால்களில் குலையும்
நாயொன்றின் துள்ளும்
வால்தான்
இக்கவிதை.
என் கண்ணுக்குள்
ஆடி
உங்கள் விரல்களின்
இரத்த ஒட்டத்தில் உரசுகிறது.
அவனுக்கென யாருமற்ற
பாதையில்
நாயது ஆகாயம் விரித்தது.
இங்கிருக்கும்
வார்த்தைகள்
நட்சத்திரங்களாய்
உற்றுக்காண்கிறது.
யாசகனின் கைக்கோல்
அசைவு
மானின் இதமான பாய்ச்சலாய்
இப்போது புல்நிலம்
மேவுகிறது.
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
ஹிட்லர் தன் தற்கொலையைத் தள்ளிப்போடுகிறார்
ஹிட்லர்
பழைய
தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம்
நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள்
தவறாமல்
அந்தத்
துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும்
நொடிக்குமுன்
யாரும்
கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக
அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம்
கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி
சன்னல் வழியே
எச்சில்
ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான
தருணம் ஒன்று
எங்கிருந்தோ
பீடிக்க
சிலநேரம்
மிரண்டு
திசைகாணாது
தூக்கி எறிவார்.
அவரது
செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க
பற்றிவரும்
அவருக்கு
நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள்
இழகும் காலமொன்றில்
தூரிகையால்
அழுத்திக்குழைத்து
தன்உடலில்
துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.
•
செவ்வாய், 5 ஜனவரி, 2016
ஒரு இசைக்குறிப்பை ஒலிக்கவிடுதல்
ஒரு இசைக்குறிப்பை
ஒலிக்கவிடுதல்
செங்கல்கள் உறைந்த
வீட்டில்
காற்று தளும்பும்
சன்னலைத் திறத்தல்
பீடிக்கும் வெக்கையை
சமையலறைப் புகையோடு
வீட்டைவிட்டுத்
தள்ளுதல்
சுமக்கமாட்டாது
சுமக்கும் அவஸ்தைக்காரனுக்கு
மெல்ல வீட்டை இறக்க
கைகொடுத்தல்
இறுகிப்போன தெருவில்
ஒற்றை வீட்டை ஊஞ்சலென
ஆட்டுதல்
சற்று தெருவைக்
கடப்பவனின் தடத்தை மிதக்க விடுதல்
வளர்ந்தவர்கள்
வாடகைக்கு வாங்கும் குழந்தைகள் சைக்கிள்
அல்லது
ஒற்றைத் தென்னையில்
காற்றிலாடும் பறவை
மேலும்
பெயரறியா ஊருக்குள்
இழுத்துச் செல்லும் ரயில்
அரிதாக
நோயுற்ற ஆன்மாவிற்கு
சமீபத்தில் அமர்ந்திருத்தல்
•
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













