வெள்ளி, 6 மார்ச், 2015

அவன் கால்கள் நிலத்திலில்லை




ஒரு பட்டத்தை
பார்வைக்குப் புலனாகாத நுலொன்று
எடுத்துச்செல்கிறது நிலவுக்கு.
அவனுக்கு இசை.

நுலின் தாளத்திற்கு
அசைந்துகொடுக்கும் மனதிற்கு
காற்றின் நிறத்திலொரு மேடை.

நுல் முடிந்து
அந்தரத்தில்
அநாதரவாய் விடப்பட்டவனின் கால்கள்
நிலத்தை அடையவில்லை.

இப்பொழுது
நிலவில் கைவைத்து
சாய்ந்தபடி அமர்ந்திருக்க
மனதின் குருட்டு ராகத்திற்கு
அலைந்துகொண்டிருக்கிறதந்த கால்கள்.  


புதன், 4 மார்ச், 2015

அரச இலைகள்












ஈர இரவின்
பிறையின் சன்ன ஒளியில்
அரச மரத்தின் சல்லி வேர்களை வரைந்தவன்
அதன் தண்டிற்காக
நண்பகலொன்றின் தூய வெப்பத்திற்கு
மரத்தடிக் கல்லில் அமர்ந்தான்.
மாலையைப் பாடும்
பட்சிகளின் அலகால்
கிளைகளை வளைத்து முடித்தவன்
இலைகளுக்கான பச்சைக் கணமொன்றை
காணாது நின்றான்.
வெட்டவெளி நெகிழ்ந்தசைய
ஒவ்வொரு இலையாய் வரைந்தவன்
கடைசி இலையின் ஸ்பரிசத்தால்
இளம்பச்சை நிறத்தானாகி
உதிரா ஓர் இலையானான்.




சனி, 24 ஜனவரி, 2015




இளமஞ்சள் வண்ணச் சூரியன்
ஒருநாளும் பேசாத மலைக்குப்பின்
காக்கைகள் அலறிக் கரைய
எல்லோரும் கடந்துவிட்ட இந்த மாலையிலே
கடைசியாய் பிரியும்பொழுது
மேலும் கொஞ்சம் தனிமையானேன்.



ஞாயிறு, 4 ஜனவரி, 2015




இரவு
மலை முகட்டுக் குளிர்
சொல்
தனித்தலைவுறும் சிறுவிருட்சம்
கவிதை
வேரடியில் கரைந்துருளும் ஈரவோடை
புலர்காலைக் கதிரோடு தரையிறங்கினால்
சாலையெங்கும் நதிகள்
மண்ணெல்லாம் தளிர்கள்.




சனி, 13 டிசம்பர், 2014

மலைகளுக்கிடையே நொண்டும் கால்கள்










குரல்கள் மொய்க்கும்
என் வீட்டுக் குழந்தைக்கும்
ஒரு குரலும் அண்டாது
சதா சாலையில் திரிந்துகொண்டிருப்பவளுக்கும் இடையில் …
என் உள் வீட்டின் உள் அறைகளில்
தோழனொருவன்       
திடீரென விளக்கை எரியவிடுவதற்கும்
சொல்லாமல் அணைத்துவிடுவதற்கும் இடையில் …
இருகைகள் பற்றி இழுக்கும் சிறுமிகளும்
கண்கள் பற்றிப்பற்றி இழுக்கும் சிறுபெண்களும்
தீட்டும் இருவேறு நிறங்களுக்கு இடையில்  …
ஈர விரல்களோடு
பின்னிருந்து கண்பொத்தும் ஒரு கவிதைக்கும்
கண்களை கட்டிக்கொண்டு
காற்றில் வலை எறிந்தபடி இருக்கும்
இந்தக் கவிதைக்கும் இடையில் …
நான் உறைந்திருக்கும் கவிதைகள்
மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட
மெல்லிய கம்பியின்மேல் கிடக்கிறது
ஒற்றைக்காலில் நொண்டியபடி.




புதன், 12 நவம்பர், 2014



பெருமரமொன்று
பலநுறு கிளைகளோடு
பலப்பல பறவைகளோடு
மண்ணடி ஈரத்தையும்
வெட்டவெளி காற்றையும்
ஸ்பரிசித்தபடி அசைந்துகொண்டிருக்கிறது.
இந்தக் காட்சியில்
குழந்தையொன்று
நினைவுக்கு வந்துபோகிறது.



ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

குட்டிநாயின் முயல்











அவளின் டாட்டாவில் அமர்ந்திருந்த
முயலொன்று
கூடவே வருகிறது.
பெரிய உருவத்தில்
தடுமாறித்துள்ளும் நாய்க்குட்டியை
நொடியில் மோப்பம்பிடித்தவள்,
காலத்தை புல்தரையாக்கி
என் நிலமெங்கும் செடி நட்டாள்
ஒட்டிக்கொண்டும் முத்தம்கொண்டும்.
அவ்வளவு சிறிய முத்தத்தை
வேரும் கனியும் காணாத முத்தத்தை
எந்த முத்தத்தையும் போலில்லாத முத்தத்தை
காலத்திற்கும் ஈரம் காயாத முத்தத்தை
எங்கிருந்து கொண்டு வந்தாள்…..
டாட்டாவிலிருந்து துள்ளிய அந்த முயல்
துவண்ட குட்டிநாயின் மடியில் கிடக்கிறது
அவளின் பாவனைகளோடு.

(ஷிஃபா (எ) அணில்குட்டிக்கு)