வியாழன், 7 ஏப்ரல், 2016



நான்கு பந்துகள் 





மதிற்சுவருக்கும் பெருமரங்களுக்கும்
பின்னிருந்து வரும்
சூரியனைப் பார்த்தபடி உருள்கிறது
மைதானத்துப் பந்து.
அணில் ஏறும் மரம் தீண்டிய
சிறுவனின் பார்வை உரசிப்போனது
மேற்கில் தொங்கும் சந்திரனில்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே
கடந்துகொண்டே இருக்கிறது நிறமழிந்த பந்து.
கம்பத்தை நெருங்கியபடி
படபடக்கும் கால்களுக்கிடையே
இளஞ்சிவப்பு நிறமாகி
மைதானத்தின் மத்தியில் நிலவுக்கு அடியில்
உயர்ந்து பறக்கையில்
வெள்ளை நிறமுமாகி
அதிகாலைப் பட்சிகளின் இறகுகளை
மைதான வெளியெங்கும் சிந்துகிறது பந்து.
நெகிழ்ந்து அசையும் இறகுகளின் லயத்திற்கு
மைதானமே ஆடிக்கொண்டிருக்க
அரூபப் பந்தொன்று தனியாக உருள்கிறது.



செவ்வாய், 5 ஏப்ரல், 2016



செல்ல நதி 



அம்மாவின் குரலொரு ஆறு இல்லையா பிள்ளையே…
நீ படுத்தபடி கை கால் அடிக்கையில்
நதி சிதறுகிறது.
நானுன்னிடம் நீந்துகிறேன் பார்க்கிறாயா….
அம்மாவின் கழுத்தை தொட்டுப்பார்த்துவா,
போகலாம்
உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான்…
தெரியுமா…..

Painting : J. Krik Richards



துள்ளும் வால்தான் இது  

சிதைந்த தேகத்தோடு
சரியச்சரிய நொண்டிச் செல்லும் யாசகனின்
கால்களில் குலையும்
நாயொன்றின் துள்ளும் வால்தான்
இக்கவிதை.
என் கண்ணுக்குள் ஆடி
உங்கள் விரல்களின் இரத்த ஒட்டத்தில் உரசுகிறது.
அவனுக்கென யாருமற்ற பாதையில்
நாயது ஆகாயம் விரித்தது.
இங்கிருக்கும் வார்த்தைகள்
நட்சத்திரங்களாய் உற்றுக்காண்கிறது.
யாசகனின் கைக்கோல் அசைவு
மானின் இதமான பாய்ச்சலாய்
இப்போது புல்நிலம் மேவுகிறது.




புதன், 17 பிப்ரவரி, 2016

















என் உடலை இழுத்துச்சென்ற
ஆயிரம் அலைகள் தர மறுக்கின்றன.
வெறும் இரண்டு கண்களோடு
கரையில் மிதந்து வருகிறேன்.



செவ்வாய், 16 பிப்ரவரி, 2016



ஹிட்லர் தன் தற்கொலையைத் தள்ளிப்போடுகிறார்

















ஹிட்லர்
பழைய தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம் நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள் தவறாமல்
அந்தத் துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும் நொடிக்குமுன்
யாரும் கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம் கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி சன்னல் வழியே
எச்சில் ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான தருணம் ஒன்று
எங்கிருந்தோ பீடிக்க
சிலநேரம் மிரண்டு
திசைகாணாது தூக்கி எறிவார்.
அவரது செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க பற்றிவரும்
அவருக்கு நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள் இழகும் காலமொன்றில்
தூரிகையால் அழுத்திக்குழைத்து
தன்உடலில் துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.



செவ்வாய், 5 ஜனவரி, 2016



ஒரு இசைக்குறிப்பை ஒலிக்கவிடுதல்






ஒரு இசைக்குறிப்பை ஒலிக்கவிடுதல்
செங்கல்கள் உறைந்த வீட்டில்
காற்று தளும்பும் சன்னலைத் திறத்தல்
பீடிக்கும் வெக்கையை சமையலறைப் புகையோடு
வீட்டைவிட்டுத் தள்ளுதல்
சுமக்கமாட்டாது சுமக்கும் அவஸ்தைக்காரனுக்கு
மெல்ல வீட்டை இறக்க கைகொடுத்தல்
இறுகிப்போன தெருவில்
ஒற்றை வீட்டை ஊஞ்சலென ஆட்டுதல்
சற்று தெருவைக் கடப்பவனின் தடத்தை மிதக்க விடுதல்
வளர்ந்தவர்கள் வாடகைக்கு வாங்கும் குழந்தைகள் சைக்கிள்
அல்லது
ஒற்றைத் தென்னையில் காற்றிலாடும் பறவை
மேலும்
பெயரறியா ஊருக்குள் இழுத்துச் செல்லும் ரயில்
அரிதாக
நோயுற்ற ஆன்மாவிற்கு சமீபத்தில் அமர்ந்திருத்தல்




புதன், 30 டிசம்பர், 2015



ஞாபகச்சிற்பம்




காலித் தண்டவாளமாகக் கிடக்கும்
மனதின்மேல்
பாரமான புகைவண்டியாக
கடந்து செல்ல ஒருத்தி இருக்கிறாள்.
நினைவின் நீள் வனத்தினுள்
உள் ஒடுங்கி வீசும் அவளது பறவைக் குரல்
அசைந்து செல்லும் என் காட்சிகளில்
நிரம்புகிறது
சாம்பல் வண்ண இசையோடு.