திங்கள், 3 அக்டோபர், 2016


அகாலத்தில் தொலைந்த கவிதை 

 
















ஒரு சொல்லும் கிடைக்காத கவிதையொன்று
தெருத்தெருவாக அலைகிறது.
இளவேனிற் மரங்களின் கிளைகளையும்
வறண்ட நதியை இழுத்துச்செல்லும் பருவங்களையும்
மலைகளுக்கிடையே தனித்துப்பாடும் தேன்சிட்டையும்
விட்டு விட்டு
எங்கோ பார்த்தபடி அலைகிறது.
நிர்கதியாய் திரியும் அதன்
தோள்பட்டையை அண்டியபடி நடந்து செல்கிறேன்
சொல் ஒன்றுக்கு திராணியற்று.
ஒரு வித்தின் கனத்திற்கு நிகரான
சொல்லுக்குத் திரிந்த அக்கவிதை
பனி கொட்டி கருகிய மரமாய்
இறுகித் தொலைந்தது அகாலத்தில்.


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
ஓவியம் - Sam Sidders

வியாழன், 29 செப்டம்பர், 2016



அந்த அலைகள் தாத்தாவுடையது    














முதன்முதலில் எனக்காக
அலைகளைக் கூட்டி வந்தார் தாத்தா.
கடலுக்குள் நுழையவிடாமல் எட்டி நின்று
என் அலைகளை அசைக்கச் சொன்னார்.
சின்ன வயதில்
அந்தப் பேருந்து விரைந்து செல்கையில்
எதிரே கடல் வந்து நின்றதை
இப்பொழுது என்னவென்று சொல்ல.
என் தாத்தாவின் ஒரு புகைப்படமும்
என்னிடம் இல்லை.
பதிலாக
கடல் நடுவே ஒரு படகு மிதக்கிறது,
தொலைவில் ஒரு முதிர்ந்த அலை
ஆகாயம் செல்கிறது.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கடல் பார்க்கிறேன்.
மாறாமல் முதல் அலையில்
எப்பொழுதும் தாத்தா வருகிறார்.



நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)

சனி, 24 செப்டம்பர், 2016

























கார்கால நிறத்து ஆகாயத்திற்கருகில்
விருட்சமொன்று
ஒரு நுறு பட்சிகளை அணைத்தபடி
மிதக்கிறது.
நின்ற கணத்திலிருந்து அசைந்த கணம்
திசையெங்கும் சிதறுகிறது மரத்தின் நிழல்.
என் இருதயத்தின் தொலைதூரத்து
சொற்களெல்லாம்
கூடுகட்டத் திரும்புகிறது
படபடத்து இப்போது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016


போதவில்லை
போதவில்லை














ரயிலுக்கு நுறு குழந்தைகள் ஏறிக்கொள்கிறார்கள்
நுறு பொம்மைகளோடு
அவர்களின் தோழர்களும் பின்தொடர்கிறார்கள்.
போதவில்லையென்று
ஆளுக்கொரு திசையிலிருந்து
இளம்பெண்களும் பூரி வடை விற்பவர்களும்.
நான்கு துப்புறவுப் பெண்கள்
அங்கும் இங்கும் திரிகிறார்கள்
யாருடைய இதயத்திற்கோ போதவில்லை.
அடங்காத கனிந்த மனம்
ஒவ்வொரு பெட்டியாக
ஒவ்வொருவரின் காலுக்கடியிலும்
முடமான ஒருவனை தள்ளிக்கொண்டிருக்கிறது.
போதவில்லை
போதவில்லை என்று
வேற்று நிலத்து யாசகனை
முதிர்ந்த தனிமையால் யாரோ செதுக்குகிறார்கள்.
ஒரு என்ஜின்
இவ்வளவு பெட்டிகளையும்
இழுத்துக்கொண்டோடுவதைப் பற்றி
முன்பு நினைத்துப் பார்த்ததில்லை.





புதன், 10 ஆகஸ்ட், 2016


வெயிலைக் கடக்கும் உடல்   















வெயில் கொட்டும் நகரச் சாலையின்
நடை பாதையோரத்தில்
பெருகி ஓடும் உடல்களை
ஞாபகங்களின் குளிர்மையோடு கடக்கையில்
எதிர்ப்படுகிறது
தரையில் கிடத்தப்பட்டிருக்கும் முடமான உடல்.
இரண்டு கண்கள் இரண்டு கண்களையும்
ஒரு உடல் பிரிதோர் உடலையும்
ஒரு காட்சி வேறொரு காட்சியையும்
ஒருசில ஞாபகங்கள் வேறுசில ஞாபகங்களையும்
சிரத்தையின்றிக் கடக்கின்றன.
துளி ஞாபகங்களும் மிஞ்சாது உலர்ந்தபடி
இந்த வெயிலைக் கடக்கின்றன.






புதன், 6 ஜூலை, 2016

வாழ்வின் மீதொரு முத்தம்






















ரயிலோட்டி
தானொரு வகை பறவையென்று
ஊருக்குள் சொல்லித்திரிகிறான்.
கூ.. .. என்ற ஒலி அவன் குரல்வளைக்குள் இறங்க
காற்றுவெறி அவன் அந்தர வீடு.
பனங்காட்டிற்குள்
வைகறை கலக்கத்தில்
தன் உடலை அழைத்துச்செல்லும்
மாய நிகழ்வுகளில்
காலம் தள்ளுபவன்
சிறுகூடும் வேயத்தெரியாதவனென
ஊர்சுற்றி மிதக்கும் சப்தங்களை
சாமத்தில் முளைத்த ஒற்றை வெள்ளியோடு
சிரித்துக் கடக்கிறான்.
காலின்றி ரயிலில் ஊறும் ஜீவன் பற்றிய
குற்றவுணர்வுப் பாடலையும்
குழந்தைகள் ஏறாத இரவு காலங்களின்
ஆலாபனையையும்
புலர்காலைப் பட்சியின் முதல் ராகத்தையும்
அவன் ஓர சேரப் பாடிச் செல்கிறான்.
ரயில் முழுக்க சொற்களை வைத்துக்கொண்டு
அவன் பாடும் பாடல்கள்
இலை பழுத்து விழுவதைப்போல்
முத்தமாக விழுகிறது
அவன் வசிக்கும் உடலுக்குள்.



திங்கள், 16 மே, 2016




இரவுச் சாலையில் செல்லும்
ஒற்றையான உடல் முணகியது
இந்த பூமியில் காற்று நிறையவே இருக்கிறது,