செவ்வாய், 25 ஜூன், 2013

ப்யானோ உறைந்திருக்கிறது 







எல்லா வண்ணச் சொற்களையும்
கருப்பு வெள்ளையாக்க இழுத்துச்சென்றது
ஆலாபனைக்காலத் துவக்கம்.
ஆரோகணத்தில் ஏறிப்பார்த்த
எனது இரண்டாம் பக்கம்
அவரோகணத்தில் சரிந்தபொழுது
உனது நடுப்பக்கம் போலிருந்தது.
அசைந்துகொண்டே காற்றில் பயணிக்க வேண்டிய
ப்யானோதானே அது.
பனிக்காலமாக இறுகவைத்திருக்கிறது
ஒரு கெட்ட சொல்லாக வாசித்த இசை.



வியாழன், 25 ஏப்ரல், 2013


திறந்து மூடும் கடல்




















கடல் எல்லாப்பக்கமும் திறந்திருக்கிறது.
அசைந்துகொண்டே எங்கும் செல்லாது
தன்னில் தானே மிதந்தபடி
துளித்துளியாய் நிம்மதியையும்
துளித்துளியாய் சலனத்தையும்
கோர்த்துக்கொண்டு
கனமற்றுக் கடக்கிறது
நூற்றாண்டுகளை.

மிக உயரத்திற்குச் சென்று
உங்களைப் போலவே எனக்கும்
குதிக்கத்தோன்றியது
தினம் பெருகும் வெக்கையை
இழுத்து உறித்துவிட்ட உடலோடு.
ஆழத்தில் கரைகிறது கடலாய்.

கரையில் தவழ்ந்து போகிறது
புத்தம் புதிதான உடல்.
நான் நீராக …
எவ்வளவு இலேசாக இருக்கிறேன்.
நான் அலையாக …
எந்தப் பிடியிலும் அகப்படாமல் துள்ளுகிறேன்.
நான் கடலாக …
எல்லாத் திக்கிலும் திறந்துகொண்டேன்.

    எல்லாம் வெயில் வந்து உலர்த்தும் வரை.   

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013



நீண்ட கயிறு கொண்ட வாளியை
என் கிணற்றுக்குள் எறிந்திருக்கிறேன்
ஆடிஆடிச் செல்கிறது
என் அந்தரங்கத்தில் மோதும்
கிளர்ச்சியோடு
பிறண்டு நிமிர்ந்ததில் அள்ளிவிட்டது
உனது சொல்லை
அதன் சப்தத்தைக் கேட்காமல் சென்றுவிடாதே
கயிற்றின் வழி வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது அது
வளர்த்து வந்த பிரியத்தைக் கைமாற்ற அறியாது.

சனி, 15 செப்டம்பர், 2012

வெற்றுவெளி


மொழிகள் புதைந்து மறைந்த நெடுஞ்சாலையில்
கருப்பு நிற சாம்பல் நிற பறவைகள்
நீயும் நானும் கரைத்த மௌனத்தில்
காற்று உடைகையில்
எனதன்பிற்குரிய சொற்களை
சுவைத்துக்கொண்டிருக்கும் கழுகுகள்
துயரத்தின் ஈர வலையை அண்டாத
கவிதையின் இரு துருவங்களுக்கிடையில்
ஒருசொல் கூட இல்லாமலிருக்கிறது. 

புதன், 29 ஆகஸ்ட், 2012


பலகாலம் தேங்கி உறைந்த நீரைப்பற்றி
அறியாதிருந்திருக்கிறேன்
ஊசியெனக் குத்தி உலர்கிறது 
அவ்வப்போது சாரல்
முகில் திரண்டு அலைந்திருந்த தெருக்கள்
மங்கலாக நினைவில் நகர்ந்தது
நனையாமல் மழையில் சென்றதை
எப்படிப் புரிந்துகொள்வதெனப் பார்க்கையில்
மழையாவதற்கான தீவிரம் சூழந்து
எழுந்து செல்கிறது நன்னீர்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012















ஒன்றும் நிகழாத பொழுதொன்று
ஆகாயத்தில் மேகத்திற்குமேல் மிதக்கிறது
உடலிற்கு சாவி கொடுத்துவிட்டு
பறந்துசென்று மேலமர்ந்தது உயிர்
சுற்றிப் பார்த்தது ...
ஒலி எழுப்பியது ...
கிளர்ச்சியுடன் சிறகடித்தது ...
கூட்டிற்குள் புகுந்தது
ஒவ்வொரு நாளையும்
மரணத்திலிருந்து இழுத்துப் பறக்கிறது.

திங்கள், 23 ஜூலை, 2012


எதிர்பாராததொருநாள் வந்திறங்கியது
புத்தம்புதிய நிலைக்கண்ணாடி
நேரெடுத்து சீவிய சிகை
சிக்கோடு கலைந்திருந்தது
கறுத்திருந்தால் பரவாயில்லை சுருங்கியிருக்கிறது
உருகிய புன்னகையை சுயநினைவற்று சுமக்கும் முகம்
அடுத்த கால் பதிவு எங்கென்றறியாததை 
நடனமென்றிருந்தேன், இது நினைவு தப்புதல்
அடப்பாவி....
இரண்டு வயது புகைப்படமா
இவ்வளவு நாள் ஏமாற்றியது
உடைத்தால் கிளைக்கும் அபாயக் கண்ணாடியின் 
இருப்பு தாளாமல்
சுவரைவிட்டுத் தள்ளி ஜன்னலில் எறிந்தேன்
யார் கண்ணாவது கூசட்டும் கண்ணாடியில் பட்டு.