புதன், 6 ஜூலை, 2016

வாழ்வின் மீதொரு முத்தம்






















ரயிலோட்டி
தானொரு வகை பறவையென்று
ஊருக்குள் சொல்லித்திரிகிறான்.
கூ.. .. என்ற ஒலி அவன் குரல்வளைக்குள் இறங்க
காற்றுவெறி அவன் அந்தர வீடு.
பனங்காட்டிற்குள்
வைகறை கலக்கத்தில்
தன் உடலை அழைத்துச்செல்லும்
மாய நிகழ்வுகளில்
காலம் தள்ளுபவன்
சிறுகூடும் வேயத்தெரியாதவனென
ஊர்சுற்றி மிதக்கும் சப்தங்களை
சாமத்தில் முளைத்த ஒற்றை வெள்ளியோடு
சிரித்துக் கடக்கிறான்.
காலின்றி ரயிலில் ஊறும் ஜீவன் பற்றிய
குற்றவுணர்வுப் பாடலையும்
குழந்தைகள் ஏறாத இரவு காலங்களின்
ஆலாபனையையும்
புலர்காலைப் பட்சியின் முதல் ராகத்தையும்
அவன் ஓர சேரப் பாடிச் செல்கிறான்.
ரயில் முழுக்க சொற்களை வைத்துக்கொண்டு
அவன் பாடும் பாடல்கள்
இலை பழுத்து விழுவதைப்போல்
முத்தமாக விழுகிறது
அவன் வசிக்கும் உடலுக்குள்.



திங்கள், 16 மே, 2016




இரவுச் சாலையில் செல்லும்
ஒற்றையான உடல் முணகியது
இந்த பூமியில் காற்று நிறையவே இருக்கிறது,






வாழ்வு சதா குழந்தையாகவே தவழ்கிறது




காலைவேளை மங்கிய நிலவினடியில்
ஒற்றையாய் அசைந்துசெல்லும் கொக்கு
நீர் வளையங்களை விடுவிக்கின்றது.
சில தாமரை இலைகளையும்
கொஞ்சம் மீன் குஞ்சுகளையும்
நானதில் வளர்த்து வருகிறேன்.
நிதானமான மேகத்தைப்போல்
சின்னஞ்சிறு படகொன்றில்
ஒருநாள் இதை கடந்து செல்லுங்கள்.





புதன், 13 ஏப்ரல், 2016



இரண்டு உடல்



ஊடுருவும் மதிய வெயிலில்
பாலத்தின் மேலிருக்கையில்
புறாக்களின் இறக்கை ஒலி
கேட்டுவிடக்கூடுமெனில்
எல்லாமும் மீண்டுவிடும்.
பாலம் இறங்கித் திரும்புகையில்
பெண்ணொருத்தி கசியவிடும்
மனம் பிறழ்ந்த புன்னகையில்
மீண்டதனைத்தும் உறைந்துவிடும்.
எதிரே பிரியும் இரண்டு சாலையில்
உடல் பிளந்து சென்றுவிட
வீடு செல்லும் வழி தவறி
சாலையோரம் கிடக்கிறது
சலனமழிந்து இருண்ட நிழல்.


வியாழன், 7 ஏப்ரல், 2016



நான்கு பந்துகள் 





மதிற்சுவருக்கும் பெருமரங்களுக்கும்
பின்னிருந்து வரும்
சூரியனைப் பார்த்தபடி உருள்கிறது
மைதானத்துப் பந்து.
அணில் ஏறும் மரம் தீண்டிய
சிறுவனின் பார்வை உரசிப்போனது
மேற்கில் தொங்கும் சந்திரனில்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே
கடந்துகொண்டே இருக்கிறது நிறமழிந்த பந்து.
கம்பத்தை நெருங்கியபடி
படபடக்கும் கால்களுக்கிடையே
இளஞ்சிவப்பு நிறமாகி
மைதானத்தின் மத்தியில் நிலவுக்கு அடியில்
உயர்ந்து பறக்கையில்
வெள்ளை நிறமுமாகி
அதிகாலைப் பட்சிகளின் இறகுகளை
மைதான வெளியெங்கும் சிந்துகிறது பந்து.
நெகிழ்ந்து அசையும் இறகுகளின் லயத்திற்கு
மைதானமே ஆடிக்கொண்டிருக்க
அரூபப் பந்தொன்று தனியாக உருள்கிறது.



செவ்வாய், 5 ஏப்ரல், 2016



செல்ல நதி 



அம்மாவின் குரலொரு ஆறு இல்லையா பிள்ளையே…
நீ படுத்தபடி கை கால் அடிக்கையில்
நதி சிதறுகிறது.
நானுன்னிடம் நீந்துகிறேன் பார்க்கிறாயா….
அம்மாவின் கழுத்தை தொட்டுப்பார்த்துவா,
போகலாம்
உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான்…
தெரியுமா…..

Painting : J. Krik Richards



துள்ளும் வால்தான் இது  

சிதைந்த தேகத்தோடு
சரியச்சரிய நொண்டிச் செல்லும் யாசகனின்
கால்களில் குலையும்
நாயொன்றின் துள்ளும் வால்தான்
இக்கவிதை.
என் கண்ணுக்குள் ஆடி
உங்கள் விரல்களின் இரத்த ஒட்டத்தில் உரசுகிறது.
அவனுக்கென யாருமற்ற பாதையில்
நாயது ஆகாயம் விரித்தது.
இங்கிருக்கும் வார்த்தைகள்
நட்சத்திரங்களாய் உற்றுக்காண்கிறது.
யாசகனின் கைக்கோல் அசைவு
மானின் இதமான பாய்ச்சலாய்
இப்போது புல்நிலம் மேவுகிறது.