செவ்வாய், 3 ஜனவரி, 2017

சுக்குக்காப்பிக்கும் ஒரு கதை
















இன்று கண்டடைந்த 84வது சுக்குக்காப்பியும்
தனியாகத்தான் உட்கார்ந்திருந்தது.
காலகாலத்திற்கும் நெகிழ்ந்திருக்கும் அதன் சரீரம்
சிதறியிருக்கிறது துகள்துகளாக.
விரல்களால் டம்ளரை வருடுகையில்
உடலெங்கும் நீரலையும்
அதன் கதையை ஓயாமல் சொல்லுகிறது.
இவ்வளவு சனத்திரளில்
இத்தனை சிறிய மேசையில்
வந்து தேங்கியிருக்கிறது
அலைகளை விழுங்கிய கடல்.
உத்திரம் நோக்கும் அதன் வட்ட வதனம்
பரிசுத்த கண்ணாடிபோல் ....
எட்டிப் பார்ப்பவர்களை காட்டிக்கொடுத்தபடி
காலம் தள்ளுகிறது.

திங்கள், 17 அக்டோபர், 2016

அந்த மழை வந்திருக்கிறது















மண் சிறு குழந்தையாகிவிட்டது
நகரம் விநோதமான ஒரு பொம்மை
உடல் உழவனின் நிறத்தை அப்பிக்கொண்டது
உதிர்ந்துகொண்டிருக்கிறது கிளிகளின் தானியம்
வேறொன்றுமில்லை
தொல்பாடல் என்ற மழை
நம் காலத்தை உடைத்துக்கொண்டு விழுகிறது
கேட்கிறதா ...
மூதாதையின் செவிமடலை எடுத்து வையுங்கள்.


செவ்வாய், 4 அக்டோபர், 2016


கடவுளின் ஐஸ் வண்டி  
















மழை நனைத்துச்சென்ற காலையிலும்
நண்பகல் பிசுபிசுப்பைக் கொட்டியபடி
பதறித் தெரிக்கின்றன வாகனங்கள்.
தூக்கக்கலக்கச் சாலைகளை
திகைக்கச் செய்யவென
அதிஅவசரமாக சிலர் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த சில நிமிடங்களில்
கசடேறிக் கிழிந்த மனிதர்கள்
காலை வயிறுக்கு வானம் பார்ப்பவர்கள்
சாலையெங்கும் சொற்களை எறிபவர்கள்.
அந்தத் திருப்பத்தில்
இந்தக் காலையைக் குணப்படுத்த வக்கற்று
சுவரில் சாய்ந்து தலையைச் சொரிகிறார் கடவுள்.
பெரும்பாலையாய்
விரவிக்கொண்டிருக்கும் என் நகரின்
ஒவ்வொரு தெருவிலிருந்தும்
அந்தக் கடவுளை ஆசீர்வதித்துத்
தேற்றக் கிளம்புகின்றன
பள்ளிக்கூட ஆட்டோக்கள்
சாலையெங்கும் ஐஸ் கட்டிகளை இரைத்தபடி


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
Painting - Ekaterina


திங்கள், 3 அக்டோபர், 2016


அகாலத்தில் தொலைந்த கவிதை 

 
















ஒரு சொல்லும் கிடைக்காத கவிதையொன்று
தெருத்தெருவாக அலைகிறது.
இளவேனிற் மரங்களின் கிளைகளையும்
வறண்ட நதியை இழுத்துச்செல்லும் பருவங்களையும்
மலைகளுக்கிடையே தனித்துப்பாடும் தேன்சிட்டையும்
விட்டு விட்டு
எங்கோ பார்த்தபடி அலைகிறது.
நிர்கதியாய் திரியும் அதன்
தோள்பட்டையை அண்டியபடி நடந்து செல்கிறேன்
சொல் ஒன்றுக்கு திராணியற்று.
ஒரு வித்தின் கனத்திற்கு நிகரான
சொல்லுக்குத் திரிந்த அக்கவிதை
பனி கொட்டி கருகிய மரமாய்
இறுகித் தொலைந்தது அகாலத்தில்.


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
ஓவியம் - Sam Sidders

வியாழன், 29 செப்டம்பர், 2016



அந்த அலைகள் தாத்தாவுடையது    














முதன்முதலில் எனக்காக
அலைகளைக் கூட்டி வந்தார் தாத்தா.
கடலுக்குள் நுழையவிடாமல் எட்டி நின்று
என் அலைகளை அசைக்கச் சொன்னார்.
சின்ன வயதில்
அந்தப் பேருந்து விரைந்து செல்கையில்
எதிரே கடல் வந்து நின்றதை
இப்பொழுது என்னவென்று சொல்ல.
என் தாத்தாவின் ஒரு புகைப்படமும்
என்னிடம் இல்லை.
பதிலாக
கடல் நடுவே ஒரு படகு மிதக்கிறது,
தொலைவில் ஒரு முதிர்ந்த அலை
ஆகாயம் செல்கிறது.
இப்பொழுதெல்லாம் அடிக்கடி கடல் பார்க்கிறேன்.
மாறாமல் முதல் அலையில்
எப்பொழுதும் தாத்தா வருகிறார்.



நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)

சனி, 24 செப்டம்பர், 2016

























கார்கால நிறத்து ஆகாயத்திற்கருகில்
விருட்சமொன்று
ஒரு நுறு பட்சிகளை அணைத்தபடி
மிதக்கிறது.
நின்ற கணத்திலிருந்து அசைந்த கணம்
திசையெங்கும் சிதறுகிறது மரத்தின் நிழல்.
என் இருதயத்தின் தொலைதூரத்து
சொற்களெல்லாம்
கூடுகட்டத் திரும்புகிறது
படபடத்து இப்போது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016


போதவில்லை
போதவில்லை














ரயிலுக்கு நுறு குழந்தைகள் ஏறிக்கொள்கிறார்கள்
நுறு பொம்மைகளோடு
அவர்களின் தோழர்களும் பின்தொடர்கிறார்கள்.
போதவில்லையென்று
ஆளுக்கொரு திசையிலிருந்து
இளம்பெண்களும் பூரி வடை விற்பவர்களும்.
நான்கு துப்புறவுப் பெண்கள்
அங்கும் இங்கும் திரிகிறார்கள்
யாருடைய இதயத்திற்கோ போதவில்லை.
அடங்காத கனிந்த மனம்
ஒவ்வொரு பெட்டியாக
ஒவ்வொருவரின் காலுக்கடியிலும்
முடமான ஒருவனை தள்ளிக்கொண்டிருக்கிறது.
போதவில்லை
போதவில்லை என்று
வேற்று நிலத்து யாசகனை
முதிர்ந்த தனிமையால் யாரோ செதுக்குகிறார்கள்.
ஒரு என்ஜின்
இவ்வளவு பெட்டிகளையும்
இழுத்துக்கொண்டோடுவதைப் பற்றி
முன்பு நினைத்துப் பார்த்ததில்லை.