திங்கள், 9 மார்ச், 2015

சாலையோரம் படுத்திருக்கும் கனவு 





சாலையோரம் படுத்துக்கிடப்பவனின்
தன்னந்தனிமையில்
தளிரசைக்கிறது கனவொன்று.
அவனை
எப்பொழுதும் முத்தமிடும்
சிறுமி ஒருத்தி
அதில் ஓடிக்கொண்டிருக்கிறாள்.
இருவரும் விரல் பற்றியபடி
பேசிப்பேசிக் கடந்த
பள்ளிச் சாலை வழியாக …
துள்ளித்கொண்டே அடைந்த
பூங்கா வழியாக …
அழுதுகொண்டே நடக்கும்
சலூன் கடை வழியாக …
ஒரு சாலை திருப்பத்தில்
தனிமையான விரலோடு ஓடிக்கொண்டிருப்பவளின்
சுண்டுவிரலை அவன் பற்றிக்கொள்ள
வேகமாக வீட்டை அடைந்து
போர்வைக்குள் நுழைந்து
நாளைய காலைச் சாலையில்
சிணுங்கிச்சிணுங்கி சண்டையிடப்போகும்
கனவைக் காணத்தொடங்கினார்கள்
இருவரும். 





வெள்ளி, 6 மார்ச், 2015

அவன் கால்கள் நிலத்திலில்லை




ஒரு பட்டத்தை
பார்வைக்குப் புலனாகாத நுலொன்று
எடுத்துச்செல்கிறது நிலவுக்கு.
அவனுக்கு இசை.

நுலின் தாளத்திற்கு
அசைந்துகொடுக்கும் மனதிற்கு
காற்றின் நிறத்திலொரு மேடை.

நுல் முடிந்து
அந்தரத்தில்
அநாதரவாய் விடப்பட்டவனின் கால்கள்
நிலத்தை அடையவில்லை.

இப்பொழுது
நிலவில் கைவைத்து
சாய்ந்தபடி அமர்ந்திருக்க
மனதின் குருட்டு ராகத்திற்கு
அலைந்துகொண்டிருக்கிறதந்த கால்கள்.  


புதன், 4 மார்ச், 2015

அரச இலைகள்












ஈர இரவின்
பிறையின் சன்ன ஒளியில்
அரச மரத்தின் சல்லி வேர்களை வரைந்தவன்
அதன் தண்டிற்காக
நண்பகலொன்றின் தூய வெப்பத்திற்கு
மரத்தடிக் கல்லில் அமர்ந்தான்.
மாலையைப் பாடும்
பட்சிகளின் அலகால்
கிளைகளை வளைத்து முடித்தவன்
இலைகளுக்கான பச்சைக் கணமொன்றை
காணாது நின்றான்.
வெட்டவெளி நெகிழ்ந்தசைய
ஒவ்வொரு இலையாய் வரைந்தவன்
கடைசி இலையின் ஸ்பரிசத்தால்
இளம்பச்சை நிறத்தானாகி
உதிரா ஓர் இலையானான்.