புதன், 6 ஜூலை, 2016

வாழ்வின் மீதொரு முத்தம்






















ரயிலோட்டி
தானொரு வகை பறவையென்று
ஊருக்குள் சொல்லித்திரிகிறான்.
கூ.. .. என்ற ஒலி அவன் குரல்வளைக்குள் இறங்க
காற்றுவெறி அவன் அந்தர வீடு.
பனங்காட்டிற்குள்
வைகறை கலக்கத்தில்
தன் உடலை அழைத்துச்செல்லும்
மாய நிகழ்வுகளில்
காலம் தள்ளுபவன்
சிறுகூடும் வேயத்தெரியாதவனென
ஊர்சுற்றி மிதக்கும் சப்தங்களை
சாமத்தில் முளைத்த ஒற்றை வெள்ளியோடு
சிரித்துக் கடக்கிறான்.
காலின்றி ரயிலில் ஊறும் ஜீவன் பற்றிய
குற்றவுணர்வுப் பாடலையும்
குழந்தைகள் ஏறாத இரவு காலங்களின்
ஆலாபனையையும்
புலர்காலைப் பட்சியின் முதல் ராகத்தையும்
அவன் ஓர சேரப் பாடிச் செல்கிறான்.
ரயில் முழுக்க சொற்களை வைத்துக்கொண்டு
அவன் பாடும் பாடல்கள்
இலை பழுத்து விழுவதைப்போல்
முத்தமாக விழுகிறது
அவன் வசிக்கும் உடலுக்குள்.