திங்கள், 30 நவம்பர், 2015



பலவீனமான இதயம்
















இந்த நிம்மதியற்ற கண்ணீர்
உன் முகத்தின் சாயலிலிருக்கிறது.
தஸ்தயேவ்ஸ்கியின்பலவீனமான இதயம்
கதைக்குள் நீ இருப்பாயா நண்பா?
பிரியம் நிரம்பிய மழைக்காலத்தில்தான்
நீ வீதியில் வந்து படுத்திருக்கிறாய்.
கவலையின்றி உறங்குபவனைச்
சுற்றுகின்றன நுறு விழிகள்.
உங்களுக்கு வேறு வேலையில்லையா?
விழிகளுக்கிடையில் தென்படும்
உன் சின்னஞ்சிறு மகளின் ஜீவனற்ற விழிகள்.
ஒருவர்கூட உனக்கு நினைவுபடுத்தவில்லையா?
கடந்த காலத்தின் சொற்கள்
மழையோடு சேர்ந்து விடாது கொட்டிக்கொண்டிருக்கிறது.
நம் நண்பனோடு
சாலையோரத்தில் நின்றுகொண்டே இருக்கிறேன்.
நீ இல்லை என்பதை எங்களுக்கு எப்படி புரியவைப்பாய்?
துயர இசையும் உன் ஞாபகமும் கலந்தபடி
மனது கொடுக்கும் மங்கிய வெளிச்சத்தில்
இரவுச் சாலையில்
ஒளியற்ற குற்றவுணர்வுக்குள்
கடந்துகொண்டேயிருக்கிறது என் வாகனம்.
ஒரு முழுநாள் எப்பொழுதும்
நான் கனவு கண்டதில்லை.
விரைவாக உறங்கி எழுந்து
நீ இருக்கிறாய் என்பதை
உனக்கு தொலைபேசியில் சொல்லட்டுமா நண்பா…?