செவ்வாய், 13 மார்ச், 2018

எல்லாவற்றையும் தொலைத்த பிறகு





















எல்லாவற்றையும் தொலைத்த பிறகு
சொற்களின்மேல் மோதிக்கொண்டேன்
எனது உடல் சிதறி துகள்களாகியிருப்பதை
அலுவலக நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி.
எனக்குத் தெரிய வேண்டும் ....
இறுதியாக
அந்தச் சின்ன குரல்வலையிலிருந்து
ஒரு சின்ன ஒலி வந்திருக்கும் ...
நான் கண்களால் முத்தமிட்ட
அந்த பட்டாம்பூச்சிக் கண்கள்
எதைத் தேடி உறைந்திருக்கும் .....
எலும்பும் இல்லாத சதையும் இல்லாத ஒன்றைக் கொண்டு
சொற்களின்மேல் வெறுமனே மோதிக்கொண்டேன்.
எல்லாவற்றையும் பேச மறுத்தபடி
சொற்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறது.



ஆங்கில மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்

After losing everything
I banged against words.
Being in my office seat,
Watching bewildered
My torso turned splinters and scattered ....
I have to know ...
Finally
Out of the tiny throat
a thin sound would've surfaced ....
what would it be ...
that the butterfly eyes I've kissed with my own
searched for and turned frozen ....
with something sans bones and flesh
I banged against words desolate.
Refusing to verbalize everything
the words stay put in the chair.








வெள்ளி, 23 ஜூன், 2017

ஒலியின் உடல் 

















ஒரு குழந்தை காற்றில் நிறைந்திருப்பதைத்தான்
இசை என்று சொல்லி வந்தேன்.
கண்ணீர் ஆவியானதென அறிந்த தருணம்
எனது துயர அறையில் வசிக்கும் ஒருவனை நினைத்துக்கொண்டேன்.
எனதுடலே ஒலிக்கூண்டாக அதிர்ந்த சமயம்
பிறந்த கணத்தை நினைவிற்கு மீட்டெடுத்தேன்.


புதன், 21 ஜூன், 2017

மழைக்கு அருகாமையில் நின்ற பொழுதுகள்   
















ஒவ்வொரு கார்காலத்திலும்
சொற்கள்
தொப்பலாக நனைந்துவிடுகின்றன.
உன்னிடம் சொல்ல எதுவும் இருப்பதில்லை.
நமக்கிடையிலான தொலைவை
இந்தத் தண்ணீர் பதற்றமாக நீந்திக் கடக்கிறது.

24X7
காய்ந்து உருகும் தார்ச்சாலை
இருளில் கொட்டும் பேரன்பால்
திசைக்கு ஒன்றாகச் சிதறி
மழையின் வீட்டிற்குப் போய்விடுகிறது.

இருளில் மழை கொட்டுவது
நீ சிரித்துக்கொண்டே பேசுவது.

குழந்தைகளற்ற
பள்ளி வளாகத்தை
சுற்றிச்சுற்றி வருகிறது மழை.
அந்தச் சொற்களின் ஞாபகங்களால்
குழைந்து நிற்கின்றன பூமரங்கள்.

மழை அத்தனை இறகாலும் நிலம் நோக்கி அசைய…
நிலம் ஒவ்வொரு கண்ணாலும் அதிராமல் காண…

செவ்வாய், 3 ஜனவரி, 2017

சுக்குக்காப்பிக்கும் ஒரு கதை
















இன்று கண்டடைந்த 84வது சுக்குக்காப்பியும்
தனியாகத்தான் உட்கார்ந்திருந்தது.
காலகாலத்திற்கும் நெகிழ்ந்திருக்கும் அதன் சரீரம்
சிதறியிருக்கிறது துகள்துகளாக.
விரல்களால் டம்ளரை வருடுகையில்
உடலெங்கும் நீரலையும்
அதன் கதையை ஓயாமல் சொல்லுகிறது.
இவ்வளவு சனத்திரளில்
இத்தனை சிறிய மேசையில்
வந்து தேங்கியிருக்கிறது
அலைகளை விழுங்கிய கடல்.
உத்திரம் நோக்கும் அதன் வட்ட வதனம்
பரிசுத்த கண்ணாடிபோல் ....
எட்டிப் பார்ப்பவர்களை காட்டிக்கொடுத்தபடி
காலம் தள்ளுகிறது.

திங்கள், 17 அக்டோபர், 2016

அந்த மழை வந்திருக்கிறது















மண் சிறு குழந்தையாகிவிட்டது
நகரம் விநோதமான ஒரு பொம்மை
உடல் உழவனின் நிறத்தை அப்பிக்கொண்டது
உதிர்ந்துகொண்டிருக்கிறது கிளிகளின் தானியம்
வேறொன்றுமில்லை
தொல்பாடல் என்ற மழை
நம் காலத்தை உடைத்துக்கொண்டு விழுகிறது
கேட்கிறதா ...
மூதாதையின் செவிமடலை எடுத்து வையுங்கள்.


செவ்வாய், 4 அக்டோபர், 2016


கடவுளின் ஐஸ் வண்டி  
















மழை நனைத்துச்சென்ற காலையிலும்
நண்பகல் பிசுபிசுப்பைக் கொட்டியபடி
பதறித் தெரிக்கின்றன வாகனங்கள்.
தூக்கக்கலக்கச் சாலைகளை
திகைக்கச் செய்யவென
அதிஅவசரமாக சிலர் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த சில நிமிடங்களில்
கசடேறிக் கிழிந்த மனிதர்கள்
காலை வயிறுக்கு வானம் பார்ப்பவர்கள்
சாலையெங்கும் சொற்களை எறிபவர்கள்.
அந்தத் திருப்பத்தில்
இந்தக் காலையைக் குணப்படுத்த வக்கற்று
சுவரில் சாய்ந்து தலையைச் சொரிகிறார் கடவுள்.
பெரும்பாலையாய்
விரவிக்கொண்டிருக்கும் என் நகரின்
ஒவ்வொரு தெருவிலிருந்தும்
அந்தக் கடவுளை ஆசீர்வதித்துத்
தேற்றக் கிளம்புகின்றன
பள்ளிக்கூட ஆட்டோக்கள்
சாலையெங்கும் ஐஸ் கட்டிகளை இரைத்தபடி


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
Painting - Ekaterina


திங்கள், 3 அக்டோபர், 2016


அகாலத்தில் தொலைந்த கவிதை 

 
















ஒரு சொல்லும் கிடைக்காத கவிதையொன்று
தெருத்தெருவாக அலைகிறது.
இளவேனிற் மரங்களின் கிளைகளையும்
வறண்ட நதியை இழுத்துச்செல்லும் பருவங்களையும்
மலைகளுக்கிடையே தனித்துப்பாடும் தேன்சிட்டையும்
விட்டு விட்டு
எங்கோ பார்த்தபடி அலைகிறது.
நிர்கதியாய் திரியும் அதன்
தோள்பட்டையை அண்டியபடி நடந்து செல்கிறேன்
சொல் ஒன்றுக்கு திராணியற்று.
ஒரு வித்தின் கனத்திற்கு நிகரான
சொல்லுக்குத் திரிந்த அக்கவிதை
பனி கொட்டி கருகிய மரமாய்
இறுகித் தொலைந்தது அகாலத்தில்.


நன்றி - திணை கவிதை சிறப்பிதழ் (செப்டம்பர் 2016)
ஓவியம் - Sam Sidders