வெள்ளி, 23 ஜூன், 2017

ஒலியின் உடல் 

















ஒரு குழந்தை காற்றில் நிறைந்திருப்பதைத்தான்
இசை என்று சொல்லி வந்தேன்.
கண்ணீர் ஆவியானதென அறிந்த தருணம்
எனது துயர அறையில் வசிக்கும் ஒருவனை நினைத்துக்கொண்டேன்.
எனதுடலே ஒலிக்கூண்டாக அதிர்ந்த சமயம்
பிறந்த கணத்தை நினைவிற்கு மீட்டெடுத்தேன்.


புதன், 21 ஜூன், 2017

மழைக்கு அருகாமையில் நின்ற பொழுதுகள்   
















ஒவ்வொரு கார்காலத்திலும்
சொற்கள்
தொப்பலாக நனைந்துவிடுகின்றன.
உன்னிடம் சொல்ல எதுவும் இருப்பதில்லை.
நமக்கிடையிலான தொலைவை
இந்தத் தண்ணீர் பதற்றமாக நீந்திக் கடக்கிறது.

24X7
காய்ந்து உருகும் தார்ச்சாலை
இருளில் கொட்டும் பேரன்பால்
திசைக்கு ஒன்றாகச் சிதறி
மழையின் வீட்டிற்குப் போய்விடுகிறது.

இருளில் மழை கொட்டுவது
நீ சிரித்துக்கொண்டே பேசுவது.

குழந்தைகளற்ற
பள்ளி வளாகத்தை
சுற்றிச்சுற்றி வருகிறது மழை.
அந்தச் சொற்களின் ஞாபகங்களால்
குழைந்து நிற்கின்றன பூமரங்கள்.

மழை அத்தனை இறகாலும் நிலம் நோக்கி அசைய…
நிலம் ஒவ்வொரு கண்ணாலும் அதிராமல் காண…