வியாழன், 13 ஆகஸ்ட், 2015



தாளாத குளம் 



குளத்து நீருக்குள்
சிறகசைத்துக் கொண்டிருக்கிறது காக்கை.
தனதான போக்கில் நீந்தியபடி
முகில் கூட்டம்.
வெயிலாய் உருகிச்சிந்திய சூரியன்
நித்திரைக்கு முன்னான பொழுதுகளை
குளித்துக் களிக்க
செடியொன்று விருட்சமானது முதல்
தண்ணீரில் உறக்கம்.
மிதக்கும் பெருவாழ்வை கோர்த்தபடி அள்ள
பரிசல்காரன் அகண்ட வலை வீசிய கணம்
கையிலிருந்த சிறு பாறையை எறிந்தேன்.
காக்கை அந்தரத்திலும்
முகில்கூட்டம்  ஆகாயத்திலும்
சூரியன் மலைச்சரிவிலும்
விருட்சம் கரையிலும்
சிதறித் தெரித்தது.
கறுத்த சாமத்திற்குள்
தன் ஒற்றை விழியையும்
தாளாது சாத்திக்கொண்டது குளம்.



நன்றி - படிகம் (நவீன கவிதைக்கான இதழ் - ஆகஸ்ட் 2015)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக